தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டர் குறித்த முழுமையான கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் தற்போது செயல்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடி முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு, சர்வதேச அளவில் டெண்டர் விடுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பு இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகள் தான். உள்நாட்டு போக்குவரத்திற்கு இந்த நெடுஞ்சாலைகள் தான் முக்கிய வழித்தடங்களாக இருக்கின்றன. இதனால், இந்த நெடுஞ்சலைகளில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றனர். இந்த நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நேரடியாக பணம் மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மத்திய அரசு ஃபாஸ்ட் டேக் முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்தியாவில் உள்ள 99 சதவீதமான வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனால், நேரடியாக வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்தே பணத்தை கழித்துக் கொள்ள முடியும்.
இந்த ஃபாஸ்ட்டேக் கார்டு மூலம் சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலை குறைக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டாலும், இது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றும் சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு தீர்வாக இனி சுங்கச்சாவடிகளை முழுவதும் அகற்றிவிட்டு வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அவ்வளவு தூரத்திற்கு மட்டும் கட்டணம் வசூல் செய்ய புதிய முறையை அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை அமலுக்கு கொண்டு வருவதற்காக தற்போது மத்திய அரசு சர்வதேச அளவில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற புதிய தொழில்நுட்பத்தை இந்தியாவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திறன் கொண்ட நிறுவனங்களுக்கான டெண்டரை கோரியுள்ளது.
தற்போது மத்திய அரசிடம் உள்ள திட்டத்தின்படி இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இப்படியாக குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கான தனி லேன்களை உருவாக்க வேண்டும் எனவும் அதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகனம் பயணிக்கும் தூரத்திற்கு தகுந்தார் போல் கட்டணம் செலுத்த போதுமான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது இருக்கும் ஃபாஸ்ட் டேக் நடைமுறையில் கட்டண வசூல் முறையும் நடக்கும். இந்த முறையில் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் அதிலேயே தொடர்ந்து கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம். குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் மூலம் கட்டணம் செலுத்த விரும்புவர்களுக்கு தனி சலுகைகள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் இதற்கான சாப்ட்வேர்களை தயாரிக்கவும் தொழில்நுட்ப கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்நிறுவனம் தயாரிப்பு மற்றும் செயல்படுத்துதல் ஆகிய இரண்டு பணிகளையும் செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மத்திய அரசை தொடர்பு கொண்டு தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் பட்சத்தில் ஒரு நிறுவனமாக இருந்தால் அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும். பல்வேறு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் இந்த சிஸ்டத்தை கொண்டு வருவதற்கு முன் வந்தால் டெண்டர் முறையில் இது செயல்படுத்தப்பட்டு உரிய நிறுவனம் தேர்வு செய்யப்படும் அந்நிறுவனம் இந்தியாவில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் மூலம் சுங்க கட்டணம் வசூல் முறையை எப்படி செயல்படுத்துவது என மத்திய அரசுடன் ஆலோசனை செய்து ஆய்வுகள் நடத்தி சோதனைகளை செய்து முடிவு செய்யும்.
இதன் மூலம் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவில் சுங்கச்சாவடிகள் எல்லாம் நீக்கப்பட்டு வாகனங்கள் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கலாம். பல்வேறு இடங்களில் குறைவான தூரத்திற்கு அதிகமான கட்டண வசூல் செய்யப்படுகிறது என்ற விமர்சனத்திற்கு இந்த தொழில்நுட்பம் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.