கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேம்பாலங்கள், சாலைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இரவு 10 மணிக்கு பிறகு மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் ஆள் அரவமின்றி மாறின. மேலும், தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
அவசர மருத்துவ தேவைகளுக்கு, விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரவுநேர ஷிப்டில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடியில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரத்தில் கமிஷனர் ரவி தலைமையிலும் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. நேற்று இரவு 10 முதல் இன்று அதிகாலை 5 மணி வரை நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டதனர்.
இதேபோல, இதர மாவட்டங்களிலும் நேற்று போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுதும் ரோந்து வாகனம், தடுப்புகள் அமைத்தது என 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் இன்று காலை 5 மணியோடு நிறைவு பெற்றது. அதிகாலை 5 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. குறிப்பாக, வெளி மாவட்டங்களுக்கான தொலைதூர பேருந்து சேவைகளில் தொடங்கின.
மேலும் பால், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறத் துவங்கியுள்ளன. இந்த இரவுநேர ஊரடங்கு இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் அமலுக்கு வருகிறது.