நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவும் ஆரம்பமாகும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோவில் பகுதியில் கடந்த மே மாதம் 11ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் மாதம் கோவிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் ஜூலை மாதம் மாற்றப்பட்டது. பின்னர் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க 250 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் பார்வையிட்ட இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு வரப்பட்டு பூமி பூஜையின் போது பயன்படுத்தப்படும் என்று ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆரம்பித்த உடனேயே கொரோனா வைரஸ் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா. ஆன்மீக சக்தியின் மீதும் கடவுளின் சக்தியும் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
மத்தியப் பிரதேச மாநில சட்டசபை சபாநாயகரும் பாஜக தலைவருமான ராமேஸ்வர் சர்மா சென்ற வாரம் இதே போல ஒரு கருத்தை கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும் என்று தெரிவித்திருந்தார்.
பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் பிறவி எடுத்தார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா தொற்று நோய்களின் அழிவும் தொடங்கும் என்று சர்மா கூறியிருந்தார்.