ராஜஸ்தான் காடேஸ்வரர் கோவிலை சேர்ந்த நடராஜர் சிலை லண்டனிலிருந்து மீட்கப்பட்டது.
1988ஆம் ஆண்டு ராஜஸ்தான், சித்தோர்கார் மாவட்டம், பரோலி கிராமத்தில் உள்ள காடேஷ்வரர் கோயிலை சேர்ந்த 9-ம் நூற்றாண்டின் பிரதிகரா கலையம்சத்துடன் நடராஜரின் காலடியில் நந்தி இருப்பது போல வடிவமைக்கப்பட்ட சிலையை போல மாதிரி ஒன்றை கோயிலில் வைத்து விட்டு கல்லினால் ஆன 4 அடி உயர நடராஜர் சிலை கடத்தப்பட்டது.
இந்த சிலையை பிரபல சிலை கடத்தல் கும்பல் தலைவனான வாமன் கியா கடத்தியதாக சொல்லப்படுகிறது. பின் சர்வதேச சிலை ஏல நிறுவனமான சோதேபை அமைப்பிடம் இந்த சிலையை, அந்த கும்பல் விற்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த சிலை லண்டனை சேர்ந்த சிலை சேகரிப்பாளர் காசிம் என்பவரிடத்தில் இருப்பது தெரிய வந்தது.
பிரிட்டன் அதிகாரிகளுக்கு இது குறித்து இந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சிலை இந்திய தூதரகத்திடம் 2005-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. லண்டனிலுள்ள இந்திய தூதரகம் செயல்படும் இந்தியா ஹவுஸில் வைக்கப்பட்டிருந்தது.
2017-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் லண்டன் சென்று சிலை ஆய்வு செய்தனர். அதில், ராஜஸ்தானிலிருந்து திருடப்பட்ட நடராஜர் சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சிலை மீண்டும் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
ராஜஸ்தானிலிருந்து திருடப்பட்ட 9 – வது நூற்றாண்டை சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை லண்டனிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது.