பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தூக்கில் தொங்கினால் கண் விழிகள் பிதுங்கி வெளியே வந்திருக்கும், ஆனால் சுஷாந்திற்கு அது போல் எதுவும் ஆகவில்லையே ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர். அவரது மரணம் தற்கொலை என போலீஸ் கூறி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியோ அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது மரணம் கொலை என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய சுப்பிரமணியன் சுவாமி சில பாலிவுட் முன்னணி நடிகர்களின் பெயர்களையும் அந்த புகார் பட்டியலில் இணைத்துள்ளார்.
தான் ஏன் சுஷாந்தின் மரணத்தை கொலை என்கிறேன் என்பதற்கான ஆதாரங்களை சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ள்ளார். அதில் தற்கொலை எது, கொலை எது என்பதை விவரித்துள்ளார். தூக்கில் தொங்கினால் கண்கள் வெளியே பிதுங்கி வந்திருக்கும். ஆனால் சுஷாந்திற்கு அப்படி வரவில்லையே.
மேலும் வாயில் நுரை தள்ளியிருக்கும், அதுவும் இல்லை. நாக்கும் வெளியே வந்திருக்கும். அப்படி எதுவும் இல்லை. தூக்கிட்டுக் கொள்ள பயன்படுத்தியதாக சொல்லப்படும் துணியை பார்த்தால், ஒரு பக்கம் தூக்கில் தொங்கிய துணி மிகவும் கீழ் நோக்கி காணப்படுகிறது. இன்னொரு பக்கம் படுக்கையில் உள்ளது. தாழ்ந்த நிலையில் ஒருவரால் எப்படி தூக்கில் தொங்க முடியும்?
மன அழுத்தத்தினால் தூக்கிட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். அதுவும் தவறு. ஒருவர் மனஅழுத்தத்தில் இருந்திருந்தால் எந்த வேலையையும் செய்யாமல் இருப்பார்கள். ஆனால் சுஷாந்தோ ஜூன் 14-ஆம் தேதி காலை அதாவது இறந்த அன்று வீடியோ கேம் விளையாடியுள்ளார். அப்படியெனில் சுஷாந்த் இறந்த நாளன்று காலை நல்ல மனநிலையில் தான் இருந்திருக்கிறார்.
ஒருவர் தூக்கு போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் நாற்காலியோ அல்லது டேபிளோ தேவை. ஆனால் சுஷாந்த் அறையில் அது போன்ற எந்த பொருட்களும் இல்லை. சுஷாந்த் உணர்வற்று கிடந்த போது பார்த்த நபர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சுஷாந்தின் நண்பர்களில் ஒருவரோ, இருவரோ, இது திட்டமிட்ட படுகொலை என சொல்லவில்லை. ஏராளமான நண்பர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்.
அடுத்த ஆண்டு தான் திருமணம் செய்து கொள்ள போவதாக தனது இறுதி போன் காலில் சுஷாந்த் பேசியுள்ளார், மன அழுத்தத்தில் உள்ள ஒருவர் திருமணத்தை பற்றி எப்படி பேசியிருக்க முடியும்? தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றவில்லை.
அடிக்கடி ஏன் சிம்கார்டை மாற்றினார். யாராவது மிரட்டினார்களா.? அப்படியே இருந்தாலும் மாற்ற மாற்ற எப்படி மிரட்டியிருக்க முடியும்? அவருக்கு பண நெருக்கடியும் இல்லை. அவரது வீட்டு பணியாளர் முன்னுக்கு பின் முரணாக கூறுகிறார். ஆதாரங்களை அழிக்கவும், பிரேத பரிசோதனையை தங்களுக்கு சாதகமான முறையில் மாற்றவும் ஆம்புலன்ஸ்கள் மாற்றப்பட்டு கூபர் மருத்துவமனைக்கு சுஷாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பட்டியலிட்ட 26 விஷயங்களில் இரு விஷயங்கள் மட்டுமே தற்கொலைக்கான சாத்தியக் கூறுகளை எடுத்துரைக்கின்றன. மற்ற அனைத்தும் கொலைக்கான சாத்தியங்களை விவரிக்கின்றன. எனவே சுஷாந்த் மரணத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.