கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களைத் தங்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையோடு வீட்டில் இருந்தாவாறே கல்வி செயல்பாடுகள் மூலம் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துவதற்காக, மாற்று கல்வி அட்டவணை ஒன்றை கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு தயாரித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இந்த அட்டவணையை, மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ மெய்நிகர் முறையில் இன்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. பொக்ரியால், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சமுக ஊடக தளங்களைப் பயன்படுத்தி கல்வியை மகிழ்ச்சியான மற்றும் ஆர்வமான முறையில் கற்றுக்கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை இந்த அட்டவணை வழங்குவதாகத் தெரிவித்தார்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதை வீட்டிலிருந்தவாறே பயன்படுத்தலாம் என்று கூறிய அவர், இணைய வசதி இல்லாதாவர்களுக்கு குறுந்தகவல் சேவை அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் உதவி வழங்கப்படும் என்றார்.