கடந்த மாதம் 29-ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகளும் குளோன் மற்றும் பல்வேறு பயன்பாடுகளின் வகைகளை தரம் பிரித்துக்காட்டும் செயலிகளாகும். அவற்றை தடை செய்வது தொடா்பான உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த செயலிகளின் பட்டியல் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்த டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 செயலிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்ததது.
கோடிக்கணக்கான மக்கள், இந்த செயலிகளை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், இந்திய அரசின் தடைக்குப் பிறகு இந்த செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போனது.
மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்தும் இந்த செயலிகள் நீக்கப்பட்டன. இந்தநிலையில் தடை செய்யப்பட்ட செயலிகளை போலவே மாதிரி செயலிகள், டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர்இட் லலட் என்ற பெயர்களில் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற 47 மாதிரி செயலிகளுக்கும் மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது.
இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.
“இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஊறுவிளைக்கும் வகையில் செயல்பட்டதால் இந்த செயலிகள் தடைவிதிக்கப்படுகிறது’’ என மத்திய அரசு தெரிவித்திருந்தது.