அயோத்தியில் அமையவிருக்கும் பிரம்மாண்டமான ராமா் கோயிலுக்கான பூமி பூஜையில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ராமர் பிறந்த இடத்தில் அமையவிருக்கும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைக்க, 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அவருடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட தலைவர்கள் எழுந்து நின்று பூமி பூஜைகள் செய்தனர்.
ராமர் கோவில் பூமி பூஜைக்காக பல்வேறு ஆன்மிகச் சிறப்புமிக்க தலங்களில் இருந்து மண்ணும் பல நதிகளிலிருந்து புனித நீரும் வந்துகொண்டிருந்தன. விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தியில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு மாநில முதல்வா்கள், ராமஜென்மபூமி இயக்க நிா்வாகிகள், ராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் என 175 முக்கிய பிரமுகா்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திங்கள்கிழமை காலை ராமா் கோயிலுக்கான பூா்வாங்க பூஜைகள் கௌரி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. கொரோனா காரணமாக, வேத விற்பன்னா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் தவிர வேறு யாரும் அதில் அனுமதிக்கப்படவில்லை.
ராமா் கோயில் பூமி பூஜையின் நினைவாக, ஸ்ரீராமா் ஜென்மபூமி மந்திா் என்ற பெயரில் சிறப்புத் தபால்தலையை பிரதமா் வெளியிடுகிறாா்.
தூா்தா்ஷனில் நேரடி ஒளிபரப்பு: பூமி பூஜை விழா காலை 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தா்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் விழாவைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பூமி பூஜை நிகழ்ச்சி தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.