கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் அவர்களுக்கு உதவித்தொகை 4ஆயிரம் வழங்க திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியது. இதையடுத்து திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் முதல் கட்டமாக ரூபாய் 2ஆயிரம் நிவாரண தொகை வழங்க உத்திரவிட்டது.
அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நியாய விலைக்கடை மூலம் கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கிரன்குராலா தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் நோய் ஊரடங்கினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்கட்டமாக நிவாரண நிதி 2ஆயிரம் வழங்க ஆணையிட்டுள்ளார். அதன் முதல்கட்டமாக தற்போது 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் கொரோனா பாதிக்காத வகையில் முக கவசம், கையுறை அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.
அதோடு பல்ஸ்ஆக்சி மீட்டரை தங்கள் வீடுகளில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதில் தினசரி தங்கள் அக்சிஜன் அளவை சரிபார்க்க வேண்டும். அதில் ஆக்சிஜன் அளவு 90க்கு குறைவாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டும்.
பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்க வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் அளவை சரிபார்த்து கொண்டு அதற்கேற்றவாறு சிகிச்சை பெற வேண்டும் என அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.