சாலையில் வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால், காட்டு யானைகள் ஜாலியாக உலா வருகின்றன. உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டு யானைகள், மான்கள், காட்டு மாடுகள், கரடிகள், சிறுத்தைகள் வசிக்கின்றன. கோடை காலங்களில் மூணாறு சாலை வழியாக அமராவதி அணைக்கு யானைகள் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். கூட்டம் கூட்டமாக யானைகள் செல்வதை வாகனத்தில் செல்வோர் ரசித்து செய்வது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாக தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து நடைபெறவில்லை.
சரக்கு வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. இரு சக்கர வாகனங்களிலும் செல்ல அனுமதியில்லை. மற்ற நாட்களில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு செல்லும். தற்போது சுற்றுலா வாகனங்களும் இயங்காததால் சாலை வெறிச்சோடி கிடக்கிறது. இக் காரத்தால் காட்டு யானைகள் மூணாறு சாலையில் ஜாலியாக உலா வருகின்றன. தன் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் நீண்ட நேரம் நிற்கின்றன. வாகன சத்தங்கள் இன்றி, எந்த இடையூறுமின்றி கம்பீரமாக யானைகள் நிற்கின்றன. மான்களும் அதிகளவில் நடமாடுகின்றன.