சூரி மற்றும் விமலுக்கு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல உதவியதாக இரு வனக்காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றதாக இருவருக்கும் வனத்துறை அபராதம் விதித்தது.
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கால் வருவதற்கு கடந்த மார்ச் 3வது வாரம் முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தங்கும் விடுதிகளும் கூட மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகர் சூரி மற்றும் விமல் இருவரும் சென்ற வாரம், அங்கு சென்று தங்கி இருக்கிறார்கள். மேலும் அங்குள்ள வனத்துறையினரின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். ஏரியில் இருவரும் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
வனத்துறையினர் விசாரணை நடத்தி இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே அனுமதியின்றி பேரிஜம் ஏரிக்கு செல்ல உதவியாக இருந்த வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி பேரிஜம் ஏரிக்கு சூரி சென்றது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையில், மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்தனர், தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக எவ்வாறு அவர்கள் பேரிஜம் ஏரிக்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.